மனித உரிமைகளை அச்சுறுத்தும் இலங்கையின் அவசரகாலச் சட்டங்களை EQUAL GROUND கண்டிக்கிறது

04 ஆகஸ்ட் 2022, கொழும்பு: மனித உரிமைகளை அச்சுறுத்தும் வகையில், இலங்கையின் நாடாளுமன்றத்தில்  ஜூலை 27 அன்று நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டங்கள் மற்றும் அமைதியான போராட்டக்காரர்களை குறிவைத்து, முக்கிய மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட, தன்னிச்சையான கைதுகளின் தொடர்ச்சியை EQUAL GROUND கண்டிக்கிறது.

கடந்த பல வாரங்களாக, EQUAL GROUND தனது குடிமக்களுக்கு எதிரான அரசின் வன்முறை மற்றும் பல்வேறு நிபந்தனைகளின் கீழ் தனிநபர்களைக் கைது செய்து காவலில் வைக்க பாதுகாப்புப் படையினருக்கு அளிக்கப்பட்ட அதீத அதிகாரங்கள் குறித்து எச்சரித்துள்ளது.

குறிப்பாக, அவசரகாலச் சட்டத்தின் 11 மற்றும் 12 வது பிரிவுகளில் தண்டனைச் சட்டத்தின் 365 மற்றும் 365A பிரிவுகளைச் சேர்ப்பது குறித்து EQUAL GROUND கவலை கொண்டுள்ளது.  காவல்துறை மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் ஏற்கனவே 365 மற்றும் 365A ஐப் பயன்படுத்துகின்றனர், இது முறையே “இயற்கையின் ஒழுங்குக்கு எதிரான உடலுறவு” மற்றும் “மொத்த அநாகரீகமான செயல்கள்” ஆகியவற்றை தன்பாலீர்ப்பினப் பெண்கள், தன்பாலீர்ப்பின ஆண்கள், ஈர்பாலீர்ப்பினர்கள், மாற்றுப்பாலினத்தவர்கள் (திருநர்), இடையிலிங்கத்தவர்கள், பால் விந்தையர் /பால் வினவினர் ஆகிய (LGBTIQ) நபர்களைக் குற்றமாக்குகிறது.  அவசரகாலச் சட்டம் 365 மற்றும் 365A இன் கீழ் குற்றங்களைச் செய்த அல்லது சந்தேகிக்கப்படும் எவரையும், வாரண்ட் இன்றி, விசாரிக்க, தேட மற்றும் தடுத்து வைக்க காவல்துறை மற்றும் ஆயுதப் படைகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்த இரண்டு பிரிவுகளும், பிரிவு 12(1)(e) இல் சேர்க்கப்பட்டுள்ளன, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை பெறக்கூடிய குற்றங்களைப் பட்டியலிடுகிறது.

“அவசரகால விதிமுறைகளின்’ கீழ் LGBTIQ நபர்களை குறிவைப்பது, அரசியலமைப்பை தொடர்ந்து ஒதுக்கி வைப்பதற்கும், பாகுபாடு காட்டுவதற்கும், கீழறுப்பதற்கும் அரசாங்கத்தின் மற்றொரு சூழ்ச்சியாகும்.  LGBTIQ சமூகத்தை ‘அரசுக்கு தீங்கு விளைவிக்கும்’ என்று களங்கப்படுத்த முயற்சிக்கும்போது, அதன் மூலம் அவர்களை காவல்துறை, ஆயுதப்படை மற்றும் பிற குடிமக்களுக்கு எளிதான இலக்குகளாக ஆக்குகிறது, ”என்று EQUAL GROUND இன் நிர்வாக இயக்குனர் ரொஸன்னா ப்ளேமர் கல்தேரா சுட்டிக்காட்டினார்.

120 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 63 பேர் எதிராகவும் வாக்களித்ததால், அவசரகாலச் சட்டங்கள் அதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டன.

பொதுவாக, அவசரகாலச் சட்டங்கள் இலங்கை அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

இலங்கையின் அபிவிருத்திகளை உலகமே உன்னிப்பாக அவதானித்து வரும் இவ்வேளையில், இவ்வாறு மனித உரிமைகள் நசுக்கப்படுவது வெளிநாட்டு உதவிக்கான தற்போதைய கலந்துரையாடல்களை, குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளை கடுமையாக பாதிக்கும்.

பல ஆண்டுகளாக, LGBTIQ உரிமை ஆர்வலர்கள் பிரிவு 365 மற்றும் 365A ஐ நீக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர், ஏனெனில் இது போன்ற சூழ்நிலைகள் இலங்கையில் உள்ள LGBTIQ சமூகத்தின் உரிமைகளை மேலும் பாதிக்கும், அவர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.  மேலும், ஒரு முக்கிய முடிவில், 365 மற்றும் 365A இன் கீழ் ஒருமித்த, ஒரே பாலின உறவுகளை குற்றமாக்குவது மனித உரிமை மீறல் என்று பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான UN மாநாடு (CEDAW) குழு கண்டறிந்தது.

இந்நிலையில், EQUAL GROUND, தண்டனைச் சட்டத்தின் 365 மற்றும் 365A சட்டப் பிரிவுகளை உடனடியாக நீக்குவதற்கான தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதுடன், அதன் அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துகிறது. 

EQUAL GROUND என்பது இலங்கையின் தன்பாலீர்ப்பினப் பெண்கள்,தன்பாலீர்ப்பின ஆண்கள், ஈர்பாலீர்ப்பினர்கள், மாற்றுப்பாலினத்தவர்கள் (திருநர்), இடையிலிங்கத்தவர்கள், (குயர்) பால் விந்தையர்/பால் வினவினர் (LGBTIQ) சமூகத்திற்கான பொருளாதார, சமூக, கலாச்சார, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைக் கோரும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.  அனைத்து LGBTIQ தனிநபர்களுக்கும் பாதுகாப்பான இடத்தை உருவாக்குவதற்கும், மனநலம், பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் அதிகாரமளித்தல், உடல்நலம், கல்வி, வீட்டுவசதி மற்றும் LGBTIQ சமூகத்திற்கான சட்டப் பாதுகாப்பு உள்ளிட்ட சுய உதவிக்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும் இது உறுதிபூண்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட EQUAL GROUND ஆனது, நாட்டில் செயல்படும் பழமையானதொரு அமைப்பாகும்.

தொடர்புக்கு: media@equalgroundsrilanka.com /+94-11-4334279

EQUAL GROUND, Sri Lanka

மறுமொழி இடவும்